
காலனுக்கு உயிரை உண்ணும் வேலைதான். அவன் ஏவலால் சூலாயுதம் கொண்டு உயிரை
எமன் கொண்டு செல்கிறான். எமனுக்கு எமனாய் இருக்கவேண்டுமானால் சூலனுக்கு
சூரனாய் இருக்கவேண்டும். அதற்குக் கால சித்தியே துணையாகும். காலசித்தி
பெற்றால் எமன் அணுகமாட்டான். வேலாயுதமாகிய வாசியில் எல்லாக்குற்றங்களையும்
இரையாக இட்டால் பிராணன் வெந்து காயாது, பசி நீங்கும். கபம் போகும்.
காம
உணர்வு நீங்கும். இவ்வாறு இருந்தால் காலன் நம்மை அணுக மாட்டான்.காயகல்பநிலை
பெற விரும்பு துறவியர்களுக்கான உணவு, இருப்பிடம் மற்றும் பல விபரங்கள்
கல்ப சாதனை செய்யவிரும்புபவர்கள் கடுமையான சக்தியுடன் இருக்கவேண்டும்.
தனிக்குடிசை (வீடு-மாடி) கட்டிக் கொள்ளவேண்டும். இந்நிலையில் நல்ல
குருவும், சிஷ்யனும் தேவை.கருங்குறுவை அரிசி, பாசிப்பயிறு, மிளகு, சீரகம்
இவைகளை வேகவைக்கக் கூடிய அளவுக்குக் காராம்பசுவின் பாலைச் சேர்த்துப்
பொங்கி ஒரு வேளை சாப்பிடவேண்டும். மற்ற நேரங்களில் காராம்பசுவின் பால்
மட்டும்தான் சாப்பிட வேண்டும்.
வேறு ஒன்றும் சாப்பிடக் கூடாது. மழை,
வெயில், பனி, காற்று நான்கும் ஆகாது. பிரம்மசரிய விரதம், ஆகாரப் பத்தியம்
கடுமையாக இருக்கவேண்டும். தவறினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.
இதனால்தான் இக்காயகல்ப சாதனை பற்றி சித்தர்கள் விவரமாகச் சொல்லாமல் மறைத்து
விட்டுப் போய்விட்டார்கள். இந்தக் கடுமையான பத்தியம் இருந்து அஜபா
காயத்திரி மந்திரம் செய்து வரும்போது மெளனமும் தொடர்ந்து இருந்து வந்தால்,
மாதாமாதம் செய்தால் 12 மாத பலனைப் பெறலாம். சிரத்தையுடன் தொடர்ந்து ஒவ்வொரு
வருடமாகப் பனிரண்டு வருடங்கள் செய்து வந்தால் 12 வருட பலனையும்
பார்க்கலாம். இதற்கு இடம், பொருள், ஏவல் மூன்றும் தேவை.
புருவ நடு திறந்து சஹஸ்ராரத்தில் நடனம் கண்டபின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்:
சஹஸ்ராரத்தில் திருநடனம் காணும்போது கண்கள் சிவந்து காணப்படும். பாதம்,
ஆசனவாய் இவைகளில் எரிச்சலும், வலியும் இருக்கும். தினமும் கொஞ்சம்
கொஞ்சமாகப் பயிற்சி செய்யவேண்டும். அப்போது வாசி செந்தீ போல் இருப்பதை
நுண்ணறிவால் உணரலாம்.
இந்தச் செந்தீயாகிய வாசிய இடுப்பிற்குக் கீழே
இருபிளவாக இருக்கும் கால்களுக்குச் செல்லுமாறு செலுத்தவேண்டும். ஒளி
காணும்வரை செலுத்தவேண்டும். சாதனை காலத்தில் புருவமத்தி, உச்சி, பிடர்
போன்ற இடங்களில் சுலபமாக ஒளி காணமுடியும். ஆனால் இடுப்பிற்குக் கீழே பாதம்
வரை யோகக்கனல் வருவதற்கு நீண்ட காலப் பயிற்சி வேண்டும்.காலை, மாலை
இருவேளையும் மூக்கு முனையில் இருவிழிகளை நிறுத்திப் பார்த்தால் இரு
விழிகளுக்கிடையில் நேர் மத்தி புருவ மத்தியில் வாசியாகிய உயிர் புருவம்
தட்டும். இந்த இடத்தில் மனம் பதிவதையே குரு என்பர். இந்நிலை வந்தால்
கருவிக்கூட்டங்கள் ஒடுங்கி ஓடிப் போய் விடும். அதாவது புலன்களும்,
கருவிகளும் செயலிழந்துவிடும்.
மனம் திறந்து ஒளி வீட்டைக்காணலாம்.கருவி
கரணங்கள் என்னும் தத்துவங்களை வென்ரதால் மனதை விட்டுக் கவலைகள் ஒழிகின்றன.
புலன்கள் சுத்தமாகும். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமே இல்லை.
புருவமத்தி என்னும் குன்றின்மீது ஏறி, பிரம்மரந்திரமாகிய மலை உச்சிக்குச்
சென்று அம்பலதரிசனம் கண்டவரே மறையோகியும் குருவும் ஆவார்.
குரு வருளால் திருவாகும் யோக்கியதை உண்டாகும். சித்தர்களுக்கெல்லாம் அரசனாக
வாழலாம். திரிகால தரிசனம் கிடைக்கும்.யோகிகள் தன் மரணத்தை மறந்து,
சரீரத்தை பேணிப்பாதுகாப்பதை மறந்து நேரங்களையும் துறந்து காலை, மதியம்,
மாலை என்று மூன்று காலமும் வாசியை ஏற்றிச் சாதனை செய்தவர்கள். தூண்டாத
ஜோதியுடன் வெளிச்சம் காண்பர். காயகற்பம் கண்டவர்கள் அமுதத்தை உண்டு கலை
சித்தி பெறுவார்கள். ஒளியைப் புருவ மத்தியில் ஏற்றியவருக்குக் கூட சஹஸ்ரார
தரிசனம் சிலசமயம் கிட்டுவதில்லை. சஹஸ்ராரத்தில் சென்ற பிராணன் குளிகை போல்
ஆகிவிடும்.
அவ்வாறு உச்சிக்குச் சென்று குளிகை ஆனால் ஆகாய மார்க்கத்தில்
பறக்கும் ஆற்றல் உண்டாகும். பிராணன் பலப்பட பலப்பட ககனமார்க்கம் செல்லும்
திறன் உண்டாகும். முக்திநிலை கூடும். இந்நிலையில் மனம் மெளனத்தில் இருந்து
மோனத்தில் ஒடுங்கும். அஜபா காயத்ரியை (ஓம்) தியானம் செய்யச் செய்ய உயிர்
வலுக்கும் குளிகையாகும். சஹஸ்ர தளத்தின் நடுவில் உள்ள கேசரங்களில் உயிர்
நிற்கும். இதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை.நெஞ்சுப்பள்ளமாகிய
அநாஹதத்தில் பிராணன்(வாசி) வரும்போது நீண்ட காலத்திற்கு அங்கேயே சுற்றிச்
சுழன்று கொண்டிருக்கும். இந்நிலையில் யோகிகளுக்குத் திட சித்தம் ஏற்படாமல்
சலனங்கள் உண்டாகும். உயிர் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும்.
அதற்கு மேல்
விசுத்தி சக்கரத்திற்கு வரும். அதற்கு மேல் விரைவாக ஏறி புருவ மத்தியாகிய
ஆக்ஞாசக்கரத்திற்கு வந்தால் சலனங்கள் மறைந்துவிடும். அதன் பிறகு நெற்றி வழி
உச்சிக்குச் சென்று முட்டும். உச்சிக்குச் சென்று முட்டும் பிராணன் அங்கு
சுற்றிச் சுழன்று வட்டமிடும். இதைப் பார்ப்பதே ஞானம் எனப்படும்.
இஞ்ஞானநிலையை விட்டு உயிர் கீழே இறங்கி பிடரிக்கு வந்தால் வாத, பித்த,
சிலேத்துமம் அதிகரிக்கும். பித்தம் அதிகமாகும். மேன்மக்கள் இருவர் கூடினால்
பலம் அதிகமாவது போல் பிராணனும் பித்தநீரும் ஒன்று கூடினால் உடல் தொல்லை
அதிகமாகும். பிராணன் இன்னும் கீழே இறங்கி வந்தால் மும்மூர்த்தியானாலும்
மரணம் அடைவார்கள்.
அதனால் எப்போதும் உச்சியிலே நிற்கவேணும். அப்படி
இறங்கினாலும் மீண்டும் லகுவாக மேலே ஏற்ற வேண்டும். காலை, மாலை இரண்டு
வேளையும் அமைதியான இடத்தில் மனமும், உடலும் இணங்கிய (காலம்) சுகாசனத்தில்
இருந்து சாதனை செய்தால் வெட்டவெளியில் மனம் ஒடுங்கும்.யோகசாதனையின்
முடிவில் யோகத்திற்குத் தடையாக இருந்த நீர் கழிந்துவிடும். பிராணன் கபாலம்
ஏறும். யோகம் 12 ஆண்டில் சித்தியாகும். அவரவர் புண்ணியத்திற்குத் தகுந்தபடி
3 ஆண்டு, 5 ஆண்டு, 8 ஆண்டு, 10 ஆண்டு, 2 ஆண்டு என யோகம் சித்திக்கும்.
மேலே செல்லச் செல்ல யோகம் எளிதாகும்.
இடைவிடாது பயின்றால் சிற்பரத்தைக்
காணலாம். இதுவே நெற்றிக்கண் திறத்தலாகும். இதற்கு மேலெ ஞானநிலை கூட உச்சி
ஏறுவர். தலை உச்சியில் கபால மத்தியில் அண்ணாக்கிற்கு நேர் தூண்போல் 1 சாண்
நீளம் ஒளி உண்டாவதைக் காணலாம். இந்நிலை வந்தால் நாவால் உணவு உண்ணாமல்
உள்நாவால் அமுதம் உண்ணலாம்.அண்ணாக்கில் உள்ள துவாரமே 10-ம் வாசல். இதை
ஊடுருவி மூலத்துண்டின் மூலம் உள்நாக்கு வழியே பற்றி வாசிக்குதிரை ஏறி ஒளி
இடமாகிய காசிக்குச் செல்.
அங்கு பரை ஆடுவதைக் காண்பாய். அண்ணாக்கில்
இருந்து உச்சிவரை செல்லும் மூல மார்க்கத்தை நடுநாடி, உயிர்நாடி, பிராணநாடி
ஆகிய வழி சென்று உயிர் நடனத்துக்குக் கூத்தாடும்.
புருவ மத்தியை நோக்கி சாதனை செய்து கொண்டிருக்கும்போது நோய்கள் வந்தால்
மருந்துகளால் குணமாகாது. யோகத்தால் அதை நிவர்த்தி செய்யமுடியும். சாதனையைப்
பாதியில் நிறுத்தினால் நோயினையே அடைவார்கள். பொய் யோகியாகி விடும்.
ஞானபதம் கண்டவர்கள் பித்தர்கள் போல் தன்னை மறந்து காணப்படுவார்கள். சுழலில்
அகப்பட்ட துரும்பு போல துடிப்பார்கள். இச்சமயத்தில் ஞானத்தால் ஊன்றி
நின்று பித்தம் போக்கி எச்சரிக்கையுடன் இருந்து 1 வருடம் வரை சாதனை
செய்யவேண்டும்.சாதனை செய்யும் ஒரு வருட காலத்தில் கிறுகிறுப்பு, மயக்கம்
இவை தோன்றும். மயங்கி விழுந்த மண்டைக்குள் வாலை கூத்தாடும். இவ்விளையாட்டு
ஒருவருடம் வரை நடக்கும்.
இதைக் குளிகை என்பர். இந்நிலை வரவிரும்பினவர்கள்
யோகத்தில் மேல்நிலையில் உள்ளவர்கள். கபாலத்தில் உயிர் குளிகையாகி
நிற்கும்போது ஏற்படும் உணர்வுகளாகும். முக்தி நிலையில் முழுமை பெற்று
சித்தி பெற்ற ஞானிகளுக்கு நாடி, நரம்புகள் இறுகிக் காணப்படும். உடல், உயிர்
இவைகளில் உண்டான மும்மலக் கசடுகள் நீங்கும். குண்டலினி சக்தி உடலில்
இருந்து ஆடிப்பாடும். மனம், உடல், உயிர் மூன்றும் ஒன்றாய் கூடி ஒடுங்கி
நிற்கும். ஒளி பெருகும், இருள்விலகும். இந்நிலை வந்தால் நரை, மூப்பு ஓடிப்
போகும்.ஞானசித்தி பெற்ற பின்பு நாடி, நரம்புகள் இறுகும். ககன மார்க்கத்தில்
செல்ல முடியும். பூமியில் நடப்பது போன்று வானத்தில் நடக்கலாம். வல்லபங்கள்
அநேகம் உண்டு.
மனதில் உற்சாகம் தோன்றும். கேட்டதெல்லாம் கிடைக்கும்.
வாலைத்தாய் குண்டலினி சக்தி முன்னே நின்று தொண்டு செய்வாள். இத்தகைய சக்தி
பெற்ற உடல் உயிர் கேவலப் பிறவியாகாது. மனம் சித்தியும், உயிர் முத்தியும்
பெறும். 2 வருடம் யோகம் செய்து சித்தி பெற்று அந்த சித்தியில்
ஏமாந்துவிடாமல் அதன் பின் ஞானமார்க்கத்தில் இரட்னு வருடம் சித்துடன்
சேர்ந்து விளையாடி முதிர்ச்சி அடைய வேண்டும்.
Post a Comment